Saturday, May 7, 2011

சீருடைகளும் பீச்சாங்கைகளும்

அரசுப் பணியாளர்களின் கண்பட்டு
அழியத் தொடங்கின
வயல்வெளிகளும் மாந்தோப்புகளும்
புதுக்குடியிருப்புகளால் உருமாறத் தொடங்கியது
நகரின் கிரணம் படத்தொடங்கிய கிராமம்

குடிசைகள் சில ஓடுவேய்ந்துகொள்ள
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
முளைக்கத் தொடங்கின
மெத்தை வீடுகள்

காலையில் ஒதுங்க பாதித்தெரு
வழக்கம் போல
டிரான்ஸ்போர்ட் மைதானத்திற்குச் செல்ல
வீட்டிலேயே கொல்லையில்
கட்டிக்கொண்டது பாதித்தெரு

வீட்டில் வந்து அள்ளிச்செல்ல
நகராட்சி இறக்குமதி செய்தது
சீருடை மனிதர்களை

எங்கள் தெருவுக்கு தேவதாஸ்
காக்கிக் கால்சட்டையில் வருவார்
ஆறடி உயர கம்பீரமாய்
கையில் வாளியுடன்

எங்கள் காலைக்கடன் முடிவில்
அவருடைய கடமை தொடங்கும்
வாரியில் எடுத்து
வாளியை நிறைத்துச் செல்வார்

ராஜா மாதிரி அவர் வர
தெருக்காரர்கள் ஒதுங்கிச் செல்வார்கள்
தங்கள் வயிற்றின்
சற்று முந்தைய இருப்பைக்
காணச் சகிக்காமல்
அருவெறுத்துத் திரும்பும் முகங்களோடு

ஒருநாள் வரவில்லை என்றால்
தெருவே நாறும் எனத் தெரிந்திருந்தும்
வரத்தவறுவதில்லை அவர்
உடம்பு சரியில்லை
கல்யாணம் காட்சி என்றால்
அவருக்குப் பதில் இன்னொருவர்
காக்கிக் கால்சட்டையில்
கையில் வாளியோடு

தேவதாஸுக்குத் திருமணம் ஆயிற்று
இப்போது சரோஜாவும்
நீலச்சேலை சீருடையில்
கையில் வாளியோடு

கோயில் தொழில்போலவே
வாளி ஏந்தும் தொழிலும்
வாழ்க்கைப் பட்டுவிட்டது
சாதிக்கு

புளியமரத்தடியில் ஐஸ்பாய் ஆட்டம்
கண்பொத்தி எண்ணி
கண்டுபிடிக்க ஓடும்போது
சரோஜா மீது
இடித்துவிட்டான் அவன்

ஐஸ்பாய் முடித்து தீட்டாட்டம் தொடங்கியது
தொடாதீங்க யாரும்
தொட்டாத் தீட்டு
கேலி செய்யத் தொடங்கினாள்
கங்கா அக்கா கிருஷ்ணாபாய்
கூடச் சேர்ந்துகொண்டது கூட்டம்

அழத்தொடங்கும் வேளையில்
ஆறுதலாய்ச் சொன்னாள் ஒருவார்த்தை
போய் அம்மாக்கிட்ட சொல்லி
மஞ்சதண்ணி தெளிச்சிக்கோ

அம்மாவிடம் மஞ்சத் தண்ணி கேட்டான்
அம்மா மஞ்சள் தூளைக்
கரைக்கத் தொடங்கினாள்

மஞ்சள் கிழங்குகளை
அரைத்துத் திரட்டினாற்போல்
அள்ளிக்கொண்டு போனாள் சரோஜா
வாளியை நிறைய
யாரையும் சட்டைசெய்யாமல்

அப்புறம்
கூரைகள் மாடிகளாயின
வீட்டுக்குள்ளேயே அதுவும்

தேவதாஸும் சரோஜாவும்
எங்கோ போய்விட்டார்கள்
வாளியோடு
தீட்டைச் சுமந்துகொண்டு

No comments:

Post a Comment