Saturday, November 29, 2014

எதுக்குச் சொல்றேன்னா



எதுக்குச் சொல்றேன்னா…
நேற்று என்னுடைய மாணவநண்பருடைய புதுவீட்டிற்குச் செல்வதற்கு ஏறக்குறைய நான்கைந்து மாதம் கழித்து வாய்ப்பு அமைந்ததால் புத்தகப் பரிசோடு செல்ல முடிவுசெய்தேன். மூத்த மாணவநண்பர் சங்கர் என்னை அழைத்துச் சென்றார். வம்சிக்குச் சென்றோம். அவருஇவரு என்பது செயற்கையாக இருக்கிறது. ஏனென்றால் சங்கரும் பிரவும் என் செல்லப்பிள்ளைகள். ஆனாலும் ஒருவேளை வருத்தப்பட்டால்… அதனால் ர் போட்டே எழுதுகிறேன்.
நான் கவிதை, புதிய புனைகதைகள் ஏதேனும் எனத் தேடினேன். சங்கர் நீங்கள் வாங்குவதை வீட்டிலுள்ள மகளிர் உறுப்பினரும் படிக்க வேண்டுமெனில் உங்கள் கோணத்தில் வாங்காமல் விஜய்தொலைக்காட்சி கோபியின் எழுத்து போல வாங்குங்கள் என்று ஒரு புத்தகத்தைக் காட்டினார். அவன் கருத்து என்கையைச் சற்றே பின்னுக்கு இழுத்து கால்களை உள்ளறைக்கு நகர்த்தியது. சற்றே தேடும்போது நான் நேசிக்கும் அண்ணன் ச. தமிழ்ச்செல்வனின் என் சக பயணிகள் என் கையை விட்டு இறங்க மறுத்தது. சரி இதனைப் பிரபுவுக்கு என எடுத்துக்கொண்டேன்.
     அவன் – மன்னிக்கவும் - என்னால ர் போட்டு செயற்கையாக எழுதமுடியவில்லை. அவனுடைய மனைவிக்காக ஒன்று வாங்க எண்ணினேன்.  பிறகு சங்கரிடம் கோபியின் புத்தகத்தைத் தேடுமாறு கேட்க, நீயும் நானும் கைக்கு வந்தது. அப்படியே நோட்டம் விடும்போது என் பணிவாழ்க்கையில் பாலிய நதியின் ஈரக்காற்று சில்லென மோதியது. மேல் அடுக்கில் சார்வாகனின் எதுக்குச் சொல்றேன்னா புத்தகம். மின்கம்பியைத் தொட்ட அதிர்வலை எனக்குள். நான் மெய்ப்புத் திருத்தம் பார்த்த நூல். எனக்கும் க்ரியா மொழிக்குமான பத்துமாத கருவறைத் தொடர்பின் ரகசியமான காதல் சின்னம். முகுந்த் நாகராஜனின் கவிதையில் வருமே சித்தாள் தன்சேலையைக் காயவைத்த செய்தியைத் தன் மகனுக்குச் சொல்லாத கதை போல.
மனம் பின்னோக்கிப் பயணித்தது. ஒருநாள் க்ரியாராம் கூறியதாக பாராசு ஐயா என்னை அழைத்து, அச்சகத்திற்குச் சென்று மெய்ப்புத் திருத்தப் பணி செய்யுமாறு கூறினார். ஏற்கெனவே அவர்கள் பார்த்து முடித்து இறுதிநிலையில்தான் எனக்குப் பணித்தார்கள் என நினைக்கிறேன். க்ரியா ரவிச்சந்திரன் பார்த்திருக்கலாம். அல்லது நாராயணன் ஐயா…. நானும் கோட்டூர்புரம் சென்று செம்மைப்பணியைச் செய்தேன். கையால் அச்சுகோக்கும் காலமது. ஆங்காங்கே புள்ளிகள் அலங்கோலமாக இருந்தன. அவற்றையெல்லாம் நீக்கச்சொல்லிக் கொடுத்துவிட்டு பாராசு ஐயாவிடம் தெரிவித்துவிட்டு நான் என்னுடைய பணியில் மூழ்கிவிட்டேன். அதுவரை க்ரியாராம் என்னிடம் நேரடியாகப் பேசியதில்லை. அன்று என்னை அழைத்துப் பேசினார்கள். இறுதி அச்சுவடிவம் சரியாகப் பார்க்கப்படவில்லை என்பதால் அது திருப்பப்பட்டது. மற்றொன்று என்னுடைய பணிக்கான கூலி எனக்கு வழங்க முடிவுசெய்யப்பட்டது. நான் வேலாயுத்தின் மகனாக வெதெ மாணிக்கம் ஐயாவின் மாணவனாக வளர்ந்ததால் பணியை நேசிப்பேனேயொழிய பணத்தைச் சிறிதும் நேசிக்கமாட்டேன் என்பதால், பணியில் பெருங்குறையாக உணர்ந்து மனம் நொறுங்கினேன். என்னுடைய தவறாக ஏற்றுக் கூலிவாங்க மறுத்தேன். என்னுடன் க்ரியாராம் முதன்முதலாகப் பேசிய தருணமது. அவர்களைப் பொறுத்தவரை கொடுத்தே தீருவது என்றும் என்னைப் பொறுத்தவரை வாங்கவே மாட்டேன் என்றும் சில நிமிடங்கள் இறுக்கமாக் கடந்தன. இறுதியாக அவர்களின் நிறுவனமுகத்திற்கு எதிரே என்னால் மறுப்பு எடுபட வாய்ப்பில்லாததால், வாங்கிக்கொண்டேன். அவமானம் என்னுடைய பாலியநதியில் ஏதோ கழிவுநீர் கலந்தது போல உறுத்தியது. ஒரு பணிக்களங்க முத்திரையை என்மீது சுமத்தியதுபோல அந்தக் கூலித்தொகை என்னை வாட்டியது. அவர்கள் அன்பானவர்கள். பணியில் நூறு விழுக்காட்டிற்குமேல் நேர்த்தியை எதிர்பார்ப்பவர்கள். நெய்த ஆடையை முடிக்குந் தறுவாயில் இழையை அறுத்தற்குக் கூலியா என்று மனத்திற்குள் அழுதேன். எனக்கு அப்போதெல்லாம் ஆறுதல் ரெகுநாதன் அண்ணாவும் என் உலகத்தமிழாராய்ச்சி நிறுவனமும்தான். மனம் இறுகிக்கிடந்தால் திருவான்மியூரிலிருந்து கிண்டிவரை நடந்தே வருவேன். இடையில் இளைப்பாற, நிறுவனத்தின் தனிஅலுவலர் மராவின் நேசமிக்க மேசையும்… தோழர் வளர்மதியின் வீடும்... அந்த நடையில் இறுக்கம் தளர்ந்து இயல்புக்கு வருவேன். ஆனால் அன்றைய அந்த நிகழ்வில் ஏற்பட்ட இறுக்கம் கிண்டிவரை நடந்தும் தளரவில்லை. இன்னும்கூடத்  தளரவில்லை என்பதை, இன்று அந்தப் புத்தகத்தின் பிரதியைப் பார்வை தொட்டபோது உணர்ந்தேன். ஆனாலும் கணவன்பேர் இல்லாவிட்டாலும் காதலுக்குப் பிறந்த பிள்ளை மீதான ரகசியநேசமாய் அந்தப் புத்தகத்தைப் பத்துவிரல்களாலும் தழுவினேன். சங்கர் உடன் இல்லையென்றால் நெஞ்சாரத் தழுவி முத்தமிட்டிருப்பேன். இவை அத்தனையும் ஒருவழிப்பாதை போல என் மனத்தின் தடங்கள்தான். க்ரியாராமுவுக்கோ, பாராசு ஐயாவுக்கோ இந்த உணர்வுகள் தெரிய வாய்ப்பில்லை. ஒருவேளை இந்த இடுகையைப் படிக்க நேர்ந்தால் அவர்கள் அப்படியா என்றோ அல்லது அப்படி ஏதும் நிகழவில்லை என்றோகூடக் கூறலாம். இல்லைஇல்லை மொழியலாம்.  
ஆண்டுதோறும் திருவண்ணாமலையிலிருந்து புத்தகக் கண்காட்சிக்குச் சென்றுகொண்டிருந்தாலும், நீண்ட இடைவெளிக்குப் பின் புத்தகக் கண்காட்சியில் க்ரியா அறைக்குள் நுழைந்தபோது க்ரியாராம். வணக்கம் சொன்னேன். வாங்க நெடுஞ்செழியன் என்று அன்போடு புன்னகைத்து அழைத்து உரையாடினார். என்பார்வையில் உறவாடினார். அங்குப் பணியாற்றும்போது இந்த அன்புக்காக நான் ஏங்கியது அவர்களுக்குத் தெரியாது. பனி உறைந்த மலைபோல பணியில் இறுக்கமாக இருந்த பாராசு ஐயாவுக்குள்ளும் க்ரியாராமுக்குள்ளும் இந்த இளநீர்த் தளும்பலை நான் அன்று உணர்ந்திருந்தால் நான் மொழியிலிருந்து வெளியேறியிருக்க மாட்டேன். அன்று க்ரியாவும் பாராசு ஐயாவும் எனக்கு வாசிப்பில் வழங்கிய அந்த கர்ணக்கொடையை மறுக்கமுடியுமா? பணியின் நேர்த்தியைக் கடுமையான முகத்தோடு கற்பித்ததைத்தான் மறக்கத்தான் முடியுமா? யாரேனும் கரும்பு தின்ன…. கூலி கேட்பார்களா என்ன!
சரி, அப்புறம், எங்கள் வீதி வெயிலில் புழுதியாடி மழைநாட்களில் சேறாடிக் கிடக்கும். என்வண்டி அந்தச் சேற்றில் விளையாடிக் களித்த மழைநாட்கள் விலகி ஒருமாதத்திற்குப் பிறகு அதைக் குளிப்பாட்டி மெருகேற்றச்சொல்லி பணக்களத்தில் விட்டுவிட்ட நிலையில்தான் சங்கர் என்னை அழைத்துச்சென்றான். சண்முகா கல்லூரியில் ஒருவாரப் பணி. பிரபு தற்காலிகப் பேராசிரியர் பணியிலிருந்து நிரந்த பள்ளியாசிரியர் பணிக்குச் சென்றுவிட்டான். புதுமனைப் புகுவிழாவன்று நான் வேறொரு பணிநிமித்தம்  மதுரை சென்றுவிட்டேன். அதனால், நேற்று செல்ல முடிவு செய்தபோதுதான் மேற்படி மனவோட்டங்கள். காலையில் கல்லூரிக்கு வந்து விட்டுவிட்டு சங்கர் சென்றுவிட, மாலை பிரபுவின் தம்பி, என் மற்றொரு செல்லப்பிள்ளை சீனு அந்தப் பணியை மேற்கொண்டபோதுதான் பிரபு வீடு செல்ல இந்த வாய்ப்பு. ஆனாலும் ஆறுமணிக்கும் தேர்வுப் பின்னூட்டப்பணி முடியவில்லை. வண்டியை எடுக்க வரச்சொல்லி ஏஎஸ் பணிக்களம் அவசரப் படுத்தியதால் பிரபு வீட்டிற்கு இன்றும் செல்ல முடியவில்லை. சீனு என்னைக் கொண்டுவந்து பணிக்களத்தில் விட்டுச்சென்றான். வழியில் சுழியம்ஏழு துணைஇயக்குநர் சுரேஷ் என்னைச் சந்திக்க அழைத்தும் செல்லமுடியவில்லை. இறுகிய மனத்திற்கு இதமான வார்த்தைகளோடு செல்வன் வீட்டிற்கு வந்திருந்தான். நாளைதான் எப்படியாவது பிரபு வீட்டிற்குப் போய்வர வேண்டும். இதோ என் கையருகே கண்ணைத் தழுவியவாறு  கணினி மேசையில் எதுக்குச் சொல்றேன்னா. என் மொழி வாசத்தை இன்னொருநாள் எழுதுகிறேன். எதுக்குச் சொல்றேன்னா, கீழேயிருந்து ரமாவின் அழைப்பு, இப்போ காப்பி குடிக்க போறேன்.