Wednesday, April 22, 2020

எங்கள் மனதைத் தருகிறோம் கல்லறையாக டாக்டர் சைமன் அவர்களே!


எங்கள் மனதைத் தருகிறோம் கல்லறையாக டாக்டர் சைமன் அவர்களே!

எனக்கு உங்களைத் தெரியாது. ஆனால், நான் பார்த்த டாக்டர்களின் முகங்களில் உங்களைப் பார்க்கிறேன். ஒரு காலத்தில் சுரம் என்றால் சுக்கு கசாயம். கம்பளிப் போர்வை. வேர்த்து சுரம் விடும். சளிக்கும் தலைவலிக்கும் வாசலிலேயே மருந்துகள் வளர்ந்திருந்தன. எங்கள் பகுதிக்கு டாக்டர்கள் வந்தார்கள். எங்க அம்மாவின் பாண்ட்ஸ் கம்பெனி வாயிலாக இஎஸ்ஐ மருத்துவமனை நட்பாயிற்று. குழந்தைப் பேற்றுக்கு  ஸ்டேசன் ரோடில் பிரைமரி ஹெல்த் சென்டர் இருந்தது.  வீட்டு அலமாரியில் விக்ஸ், அமிர்தாஞ்சன், நீலகிரி தைலம் மற்றும் அனாசின். அங்கொன்றும் இங்கொன்றுமாக மாலை மருத்துவமனைகள். சுரம் தலைவலி என்றால் ஒரு ரூபாய் டாக்டர்.. ஒரு ஊசி போட்டு டானிக் கொடுத்தால் இரண்டு முதல் ஐந்து ரூபாய். பழைய சோத்துக்கு பதிலாக ஓட்டல் இட்லியும் பன்னும் வட்ட வட்ட பிஸ்கெட்டுகளும். பிறகு நாங்கள் வளர வளர டாக்டரியமும் வளர்ந்தது. நடுத்தர வர்க்கத்தின் எளிய டாக்டராக வாசுதேவன். டாக்டர் லட்சுமணன். அப்புறம் சிடுமூஞ்சி டாக்டர் ஆளவந்தார். அவர் மனைவி டாக்டர் நிர்மலா. அவரவர்களுக்கு ராசியான டாக்டர்களானார்கள். பின்னர் எங்கள் பகுதியில் எங்களுக்கென்று விநோதினி டாக்டர். 
வாசல்களில் மருந்துகள் அகற்றப்பட்டு ரோஜாச் செடிகளும் குரோட்டன்சுகளும் வளரத்தொடங்கின. ரெண்டு ரூபாய் ஐந்தாகி பத்து ரூபாயாக வளர்ந்தது. தடுக்கி விழுந்தால் டாக்டர் வீடு என்றே எங்கள் வளர்ச்சியை வரையறுத்தது நாகரிகம். வீட்டு விசேஷங்களுக்கு பத்திரிகை கொடுத்து அழைக்கும நட்பும் வளர்ந்தது. காலை அரும்பி பகலெல்லாம் போதாகி. மாலை டாக்டரைப் பார்த்தால்தான் முடிவுக்கு வரும் நோய் என்றாயிற்று. ஏற்கெனவே பச்சை மலையில் டிபி ஆஸ்பத்திரி. பிறகு, எம்ஐடி கேட் பக்கத்தில் மெயின்ரோட்டில் அரசு மருத்துவமனை கட்டப்பெற்றது. கூடவே ஊருக்குள் தனியார் மருத்துவமனைகளும். பெரிய அளவில் நோய் என்றால் சென்ட்ரல் பெரியாஸ்பத்திரியும், எக்மோர் சில்ட்ரன் ஆஸ்பத்திரியும். எம்ப்ளாயி கார்ட் இருந்தால் கேகேநகர் இஎஸ்ஐ மருத்துவமனை.
அக்காள் மகன் கணேஷ், பிரைமரி ஹெல்த் சென்டரில்தான் பிறந்தான். குழந்தை பிறந்த மகிழ்ச்சி ஒரு நாள்தான். குழந்தை ஆய்போக வில்லையே என்று கவலையோடு அம்மா கேட்டபோதுதான் பார்த்தோம். குழந்தைக்கு ஆசனவாயே இல்லை. அதிர்ந்த எங்களை அரவணைத்தது எக்மோர் சில்ட்ரன் ஆஸ்பத்திரி. மலக்குடலை இடுப்பில் ஓட்டையிட்டு வைத்தது முதல் அறுவை. மலவாயை முறையாக்க வழி அமைத்தது இரண்டாம் அறுவை. இடுப்பில் இருந்து மலக்குடலை நேர்ப்பாதைக்கு மாற்றியது மூன்றாம் அறுவை. அறுவை வெற்றியாக முடிந்தது என்று தலைமை மருத்துவர் அழைத்துச் சொன்னார். ஒரு உயிரைக் காத்த கடமையின் பூரிப்பு அவர் முகத்தில். அத்தனையும் அந்த சின்ன குழந்தைக்கு இரண்டரை வயதுக்குள். மூன்றாம் அறுவை வெற்றியாக முடிந்து மகிழும் வேளை, பிணமாகத்தான் வீட்டுக்கு வந்தான். மரணத்தின் காரணம் தெரியவில்லை. ஆனால், இரண்டாம் நாளே உயிர்வாழ வழியில்லாதவனை இரண்டரை வயதுவரை போராடி வாழவைத்ததில் வெற்றி பெற்றது மருத்துவம். இப்போது அந்த தலைமை மருத்துவரை நினைத்துப் பார்க்கிறேன்.  அவர் பெயர் தெரியவில்லை. அவர் முகம் கூட நினைவில் இல்லை. ஆனால் அந்த மருத்துவராக நீங்கள் என் கண்ணுக்குத் தெரிகிறீர்கள்.
அக்காள் மகள், ஒன்றரை வயது இன்மொழிமங்கைக்கு டெங்குகாய்ச்சல். கோயம்புத்தூர் மாசானிக் மருத்துவமனையில் சேர்த்தோம். வந்த குழந்தைகள் ஒவ்வொன்றும் பிழைக்க முடியாத நிலையிலோ பிணமாகவோ வரிசையாக வெளியேற, அதிசயமாய் இன்மொழி மட்டும் உயிர் பிழைத்தாள். மருத்துவர்களும் செவிலியர்களும் அன்று ஆற்றிய பணிகளை இன்று வரை மறக்க முடியாது. நான் நன்றியோடு ஒரு கவிதை எழுதி மருத்துவமனைக்கு வழங்கினேன். அவள் உயிர்பிழைத்த நிலையில் மனம் நிறைய மகிழ்ந்து  வழியனுப்பிய டாக்டரின் முகத்தை நினைக்கும்போது,  நீங்கள் தெரிகிறீர்கள் சைமன்.
எழில் ஆறுமாத குழந்தை.  ஊருக்குச் சென்று திரும்பினோம். வழியிலேயே குழந்தைக்குக் காய்ச்சல். ஊரெல்லாம் தீபம் ஏற்றி கார்த்திகையைக் கொண்டாடும்போது, எழிலை மடியில் கிடத்திக் கொண்டு செய்வதறியாது திகைத்தோம். உச்ச நிலையில் சுரம். மறுபுறம் பேதியாகிக் கொண்டிருக்கிறது. குழந்தை அழமுடியாமல் துவண்டு கிடக்கிறான். அதிகம் வாங்குபவர் என்றாலும். ஓவர்டோஸ் டாக்டர் என்று விமரிசனங்கள் இருந்தாலும், அன்று எழிலை காப்பாற்றிக் கொடுத்தவர் சன்னதிதெரு பிரபாகரன் டாக்டர். அப்புறம் தொடர்ந்து எழிலும் குழலும் ஆளாகும் வரை அவர்தான் குடும்ப மருத்துவர். இப்போது அவர் தொடர்பில் இல்லை. ஆனாலும் அவரை யோசிக்கும்போது,  என் கண்ணில் அவராக நீங்கள் தெரிகிறீர்கள்.
குழல் பிறந்த போது, அத்தனை பேரின் முகத்திலும் கவலைக்கோடு. ரமா கண்ணீரோடு. முதுகுத்தண்டின் மையத்தில் ஓடும் சீரம் எல்லாம் தண்டுக்கு வெளியே முதுகில் கண்ணாடித் தோலுக்குள் கட்டிபோல ததும்பி நிற்கிறது. பவித்ரா மருத்துவ மனையில் நடைபிணமாய் நின்றோம். உடனடியாக அறுவை செய்தால்தான் குழந்தை பிழைக்க வாய்ப்பு என்று தலைமை மருத்துவர் சொல்ல, கையில் பணமும் இல்லை. பிழைக்குமா என்ற நம்பிக்கையும் இல்லை என பிஞ்சுமுகம் பார்த்து கலங்கி நின்றோம். அறுவை செய்யும் டாக்டர் நிரஞ்சன் என்னை அழைத்து சொன்னார். மூன்று நாளாகிறது. உடனே அறுவை செய்ய வேண்டும். நீங்கள் பணம் கட்ட தாமதமானாலும் பரவாயில்லை. குழந்தையைக் காக்க வேண்டியது என் கடமை. உடனே அறுவை செய்யப் போகிறேன் என்று. அக்காக்களும் அண்ணனும் பங்குபோட்டு பணம் கொடுக்க, குமரேசன் சாரிடம் கடன் வாங்கிக்கொண்டு ஓடினேன். பிஞ்சு ஒடம்பு. நரம்புகள் இப்போதுதான் உருவாகி வளரும். அறுவையில் ஏதேனும் நரம்பு அறுபடலாம். குழந்தைக்கு கால் நடக்க வராமல் போகலாம் என்று சொல்லி அறுவையைத் தொடங்கினார். நல்ல வேளை நரம்பு ஏதும் அறுபடவில்லை என்று அறுவை முடிந்தவுடன் அகம் மலர்ந்து சொன்னார்,  ஆனாலும் குழந்தை புரண்டு படுப்பானா, நகர்வானா, எல்லோரையும் போல் நடப்பானா என்று பருவந்தோறும் மனதில் அச்சத்தோடே காலம்  நகர்ந்தது. இப்போது அவன் கட்டிளங்காளையாக நடைபோடும்போது  டாக்டர் நிரஞ்சன் முகத்தைத் தேடுகிறேன். அந்த முகமாக நீங்கள் தெரிகிறீர்கள். எங்கள் அம்மாவிற்கு மட்டும் எப்போதும் ஓமியோ டாக்டர் செல்வசேகரன்தான். எங்கள் அப்பா ஆஸ்த்துமாவில் தவிக்கும்போதெல்லாம் கைகொடுத்தவர் டாக்டர் இளங்கோதான். தமிழ்மருத்துவம் குறித்த ஆய்வுக் காலத்தில் எனக்கு ஆயுர்வேத டாக்டர் செல்வரங்கமும், திருவண்ணாமலை வாழ்க்கையில் ஓமியோ மருத்துவர் செல்வ சேகரனும், சர்க்கரை நோய்க்கு டாக்டர் தேவானந்தும், தவிர்க்க முடியாத உடனடி தேவைகளில் அவ்வப்போது பைபாஸ் ரோடு சந்தோஷ் கிளினிக் இராஜேந்திரனும், தோள்பட்டை வலியில் இயங்கமுடியாமல் தவித்தபோது வர்மானிய ஆசான் அர்ஜுனனும் என் மெய் காப்பாளர்கள். எல்லாவற்றுக்கும் மேலே மூன்று மாதங்களுக்கு முன்பு என் அண்ணன் 90 விழுக்காட்டுக்கும் மேலே இதயத்தில் அடைப்புக்கு ஆளான போது, நம்பிக்கையோடு அறுவை செய்து அவனை நலமாக்கி ஒப்படைத்தவர் பில்ரோத் டாக்டர் அருண். அவர்கள் முகங்களும் உங்கள் முகமும் ஒன்றுதான். வாழ்வதற்கு நம்பிக்கை அளிக்கும் முகம்.  உங்கள் மருத்துவமனை பெயர்கூட புதியநம்பிக்கை (New Hope)தானே.
பணம் கொடுத்தால்தான் மருத்துவமனையிலும் குழந்தையைப் பெறமுடியும், பணம் இருந்தால்தான் இடுகாட்டிலும் பிணத்தைப் புதைக்கவோ எரிக்கவோ முடியும்.  இடைப்பட்ட வாழ்க்கையில் நோய்களிலிருந்து மீள பணமிருந்தால்தான் மருத்துவம் கிடைக்கும் என்பது நடுத்தர வர்க்கம் ஏற்றுக்கொண்ட நம்பிக்கை. எனவே, பணத்திற்காகவே அடுக்கு மாளிகை மருத்துவமனைகள். மருத்துவ மனைகளுக்காகவே புதுப்புது நோய்கள். நோய்களுக்காகவே உழைப்பும் வருமானமும். மருந்துப்பொருள் உற்பத்தியை நம்பியே உலகநாடுகள் என்று ஆகிவிட்ட கார்ப்பரேட் காலத்தில்தான் நாம் வாழ்கிறோம்.  அலோபதி மருத்துவம் மீதும் மருத்துவர்கள் மீதும் ஆயிரம் விமர்சனங்கள் இருக்கின்றன. மாற்று மருத்துவத்தின் தேவையை இப்போது உலக நாடுகள் உணரத் தலைப்படுகின்றன. அதற்காக, மருத்துவர்களின் பணியை அதற்கான வெறும் வியாபாரமாகக் கருதிவிட முடியுமா?  முழுமையாக அலோபதி மருத்துவத்தை விலக்கிவிட முடியுமா? காலை முதல் மாலை வரை ஒவ்வொரு நோயருக்கும் மருந்தெழுதித் தந்து, மேசை இழுப்பறையைத் திறந்துதிறந்து மூடும் டாக்டர்கள் பணத்திற்காக மட்டுந்தான் அந்தப் பணியைச் செய்கிறார்கள் என்று சொல்லிவிட முடியுமா?  மருத்துவர் ஒரு நாள் விடுமுறை என்றாலும் ஒருயுகம் போல தவிக்கும் நோயர்கள் எத்தனைபேர்? வலியோடு வந்து சிரித்துப் போகும் குழந்தை முதல், அன்றாட வாடிக்கையாளர்களாகிவிடும் முதியோர் வரை நோயர்கள் நேயர்களாகி மருத்துவர்களுடன் நட்பாடல் நிகழ்த்துவது பொய்யா? அவர்களின் பணியிலும், அவர்களுடனான நட்பிலும் வேராக நிற்பது அவர்களின்  தொழில்மீதான அக்கறையும் கடமையும் நம்முடைய நம்பிக்கையும்தானே. நோயோடு ஒருபொழுது உறங்கமுடியாத நாம்,  மாலை முதல் இரவு வரை பற்பல நோய்களையும் காயங்களையும், அறுவைகளையும்  பார்த்துவிட்டு எப்படி அவர்களால் இரவு உண்ணமுடிகிறது, மனைவியோடு எப்படி உறங்க முடிகிறது என்று என்றேனும் நினைத்துப் பார்த்திருக்கிறோமா? அப்படித்தானே இதோ டாக்டர் சைமன் அவர்களும்.
அலைவுறு வாழ்க்கையில் மனிதனைப் பார்த்துக் கலங்கித்தானே கணியன் பாடினான்யாதும் ஊரே யாவரும் கேளிர்என்று. இன்று இடுகாடு இடுகாடாக அவருடைய பிணத்திற்கு அலைவுறு வாழ்க்கையைத் தந்திருக்கிறோமே. மனம் உறுத்தவில்லையா? அந்த அலைவுறு கணத்தில்,  ஒரு மருத்துவர் மட்டும் மரணிக்கவில்லை, அவரோடு, கணியன் பூங்குன்றனையும் சேர்த்தே சாகடித்து விட்டோம். எப்படியோ, வேளங்காடு இடுகாட்டில் ஒருவழியாக டாக்டர் பிரதீப்  மற்றும் ஒரிருவர் உடன்நின்று அடக்கம் முடிந்துவிட்டது.
எந்த நோய் நம்மைத் தொற்றக்கூடாது என்று நாம் கவலைப்படுகிறோமோ, அவர்களும் அதே போல் கவலைப்பட்டு, நோய் தொற்றுக்கு ஆளானவர்களைக் கவனிக்காமல் புறக்கணித்திருந்தால் அவர்களுக்கு அந்த நோய் தொற்றியிருக்காது அல்லவா. அப்படி நினைப்பதில்லையே அவர்கள். நோய்த்தொற்றிலிருந்து நம்மைக் காக்க மருத்துவம் செய்யும்போது, தம்மைக் காத்துகொள்ளவும் அதே மருத்துவம்தான் என்பது தெரிந்துதானே மருத்துவம் செய்கிறார்கள். மருந்தில்லாத நோய் என்று தெரிந்தும் மருத்துவமனையில் பணியாற்றுகிறார்களே. அவர்களுக்கு நோய் தொற்றி மரணம் நேர்ந்தால் அந்த தியாகத்திற்கு நாம் தரும் சன்மானம் கட்டையடியும் கல்லடிதானா.
டாக்டர் சைமன் அவர்களே, அவர்கள் தாங்கள் செய்யும் பாவம் இன்னதென அறியார்கள். அவர்களை மன்னியும் என்றுதான் உங்கள் உடல்முன்னே மண்டியிடத் தோன்றுகிறது. எப்படியோ, நோயில் மரணித்த உங்களை, தங்கள் செயலால் எங்கள் மனங்களில் வாழச் செய்துவிட்டார்கள். உடலைப் புதைத்துவிட்டால் என்ன, உங்களுக்கு மரணமில்லை டாக்டர் சைமன் ஹெர்குலஸ் அவர்களே. நீங்கள் இறந்துவிட்டீர்கள் என்று நம்பினால் எங்கள் மனம் உங்கள் கல்லறை. நீங்கள் வாழ்கிறீர்கள் என்றால் எங்கள் மனம் உங்கள் வாழ்வறை. வீரவணக்கம்.                                      வேல. நெடுஞ்செழியன்