கை நழுவிய விஷூக் கனி
அந்தக் குயில் பாடினால்
பரவசத்தில்
உலகமே நனைந்து கிடக்கும்
குயிலும் நனைந்திருக்கும்
கண்ணீரில்
தான் பாடும் தாலாட்டை
அர்த்தப்படுத்த
ஒரு மழலை வேண்டி,,,
ஐயிரு திங்கள் அனுபவத்திற்காய்
பதினைந்து ஆண்டுகள்
நெருப்பைச் சுமந்த கருப்பை
முதன்முதலாய் உயிரைச் சுமந்தது
கடல் குடித்த பெருவயிற்றுமேகம்
நீரறியா நெடும்பாலையில்
மொத்தமாய்க் கொட்டித் தீர்த்த பரவசம்
வந்தனா பிறந்தபோது,,,
வண்ணங்கள் பூத்த
வசந்தகாலம் அது
வாழ்தலின் உயிர்ப்பை
அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தன
பசுமையைத் தளிர்களிலும்
நிறங்களை மலர்களிலும்
எழுதிச் சென்ற நாட்கள்,,,
கடல்கடந்த பயணம் ஒன்றின்போது
கூடவே கடந்துபோனது வசந்தகாலமும்,,,
சருகுகள் சப்திக்க பயணம் தொடங்கியது
இலையுதிர்காலம்
பழுத்த இலைகளைப் பறிக்கும்வேளை
அவசரத்தில் அறியாமல்
பிஞ்சுப்பூவை ஏனோ
பறித்துவிட்டது
சதா கனவில் பூக்கும் பூ
கையில் கிடைத்தது போலத்தான்
வந்தனா வந்ததும் போனதும்
கனவாகவே
கருப்பையின் கேள்விக்குக்
காத்திருந்து கிடைத்த விடை
தொலைந்துவிட்டது
அறிவியலின் அதிசயத்தை
அர்த்தமற்றதாக்கிவிட்டது
அந்தக் கணம்
பனிக்குடத்தில் மிதந்த முத்து
நீச்சல் குளத்தில் தொலைந்துபோனது
உயிர்ப்பூவே
நீ மலர்ந்த பொழுதில்
மலடி என்ற வார்த்தை
மரித்து உதிர்ந்தது சருகாய்,,,
மகிழ்ச்சியில் திளைக்கவிடாது
மலரே நீயும் உதிர்ந்ததேன்?
தேன் துளிர்க்கும் மழலை
தண்ணீரில் கரைந்ததாய்
கண்ணீரில் கரைகின்றன பொழுதுகள்,,,
கானமழைக்குயில் கரைகிறது
கண்ணீர்மழையில் நனைகிறது உலகம்
தாய்மையின் பரிதவிப்புக்கு
ஆறுதல் என்ன கூறமுடியும்?
தாயே! கண்ணீரைத் துடைத்துக்கொள்
பாட்டை மட்டும் நிறுத்திவிடாதே
அது பூமிக்குழந்தையின்
உயிர் வளர்க்கும் தாய்ப்பால்
அமுதம் கசியும்
உன் தாலாட்டிற்காக
ஏங்கித் தவிக்கின்றனர்
வந்தனாக்கள்,,,
ஒரு வந்தனாவை நெஞ்சில் நிறுத்து
அடிவயிற்றில் சுழன்றெரியும்
நெருப்புச்சுவையின் நீலநாக்கில்
உன் சோகம் கரைத்துப்
பாடத் தொடங்கு
அவர்களுக்காக,,,
குழலும் யாழும் இழையும் குரலெடுத்து
உயிரில் குழைத்துப் பாடு
திசையெங்கும் பூக்கட்டும்
வந்தனாவின் வாசம் சுமந்த பூக்கள்,,,
மடிசுமந்தது மரித்துப்போனதால்
மரித்துப்போய்விடாது தாய்மையும்
நினைவுகள் கருசுமக்க உன்னோடு
என்றும் வாழ்வாள் வந்தனா
வந்தனாவின் அம்மாவுக்கு,,,
No comments:
Post a Comment