Wednesday, July 27, 2011

சேத்து நடுவுல

தந்தனத் தானா தந்தானா தன தந்தனத் தானா தந்தான
தந்தனத் தானா தந்தானா தன தந்தனத் தானா தந்தான

சேத்து நடுவுல நாத்து நடயில பார்த்துட்டுப் போனீங்களே - அந்த
ஆத்தங் கரையில் மாலை வரையிலும் காத்திட்டு நின்னீஙகளே
பாத்த கிறுக்குல பாவிமக புள்ள தூக்கமும் கொள்ளவில்லே
காத்து கருப்போட சேட்டை யிதுவுன்னு ஊருககுள் ரொம்ப தொல்லே

தந்தனத் தானா தந்தானா சாமிதொர தான் வந்தானா
தந்தனத் தானா தந்தானா சாமிதொர தான் வந்தானா

ஓலக் குடிசையில் எட்டிப் பார்க்கும் நிலா சாமியுன் காதலுங்க
ஏழை முதுகுல வாட்டும் சுமையாச்சு தாங்க முடியலீங்க
ஆலங் கிளையிலே ஒத்தக் கிளியா சோகத்தில நின்னிருப்பேன்
மாலை தரப்போற மாப்பிள்ளை நீர்வந்தா செக்கச் சிவந்திருப்பேன்

தந்தனத் தானா தந்தானா சாமிதொர தான் வந்தானா
தந்தனத் தானா தந்தானா சாமிதொர தான் வந்தானா

அத்தைமக னுன்னும் மாமன் மகனுன்னும் சுத்தியே வர்றாங்க
மத்தவரை நானும் கட்டிக்கக் கூடாதாம் சட்டந்தான் பேசுறாங்க
பச்ச வெறகுல வச்ச நெருப்பா உள்ளம் புகையுதுங்க
குத்தங் குறையேதும் வந்ததுவிடு மோன்னு கும்பி எரியுதுங்க

தந்தனத் தானா தந்தானா சாமிதொர தான் வந்தானா
தந்தனத் தானா தந்தானா சாமிதொர தான் வந்தானா

ஆசைப்பட்ட மனம் ஏங்கித் தவிக்குது சேர்த்திட நாதியில்லே
மீசைவச்ச இனம் மீறிவிடலாம் பேதைநான் என்ன செய்ய
வாக்குக் கொடுத்தவன் பாக்கு வைக்கத்தான் வரணும் வாசலிலே
பாக்கியம் இல்லேயே பாவந்தான் செஞ்சேனோ வரமும் கூடவில்லே

தந்தனத் தானா தந்தானா தன தந்தனத் தானா தந்தான
தந்தனத் தானா தந்தானா தன தந்தனத் தானா தந்தான

Sunday, July 24, 2011

ஏந் தூக்கத்துல

ஏந் தூக்கத்துல மச்சான் நீயும் வந்தே - முழிச்சு
பாக்கயிலே பக்கத்துல காணலியே
என்ன நடந்தது நெஞ்சு பதச்சு வந்தது கேள்வி ஒண்ணு - அடி
கள்ளச் சிறுக்கின்னு சொல்லிச் சிரிச்சுது வளையல் துண்டு ஒண்ணு -
ஓடஞ்ச வளையல் துண்டு ஒண்ணு (ஏந் தூக்கத்துல

முள்ளு வெட்டிப் போகையிலே மோட்டார்வணடி ஓட்டி வந்தே
முள்ளு தச்சு நின்னுடுமோன்னு உள்ளம்தவிச்சு ஓரம் நின்னேன்
கள்ளப் பார்வை பாத்துக்கிட்டே பள்ளத்துல சாஞ்சுபுட்டே
பல்லக் காட்டி போயிவிட்டே மல்லுவேட்டி வாட்டுதையா
முள்ளு தச்சது வேற எங்கும் இல்லே உள்ளத்துல தானே - அதை
சொல்லத் தெரியல கண்ணு கலங்குது சின்னப்பொண்ணு தானே (ஏந் தூக்கத்துல

மேட்டுப்பட்டி வெள்ளம் வந்தா பள்ளப்பட்டி தான்நிறையும்
மேட்டுக்கேதும் இழப்புயில்ல பள்ளந்தானே சீரழியும்
கேடுகெட்ட சாதிசனம் வேரைவெட்ட பாக்குதய்யா
மேடுவெட்டி பள்ளம்நெரப்பி சீருபண்ண வேணுமய்யா
ஆத்துவெள்ளத்துல சாதிபேத மில்ல எங்கயும் பாயுமய்யா - நீ
காட்டுன நேசமும் போலியில்லேன்னா தேதி சொல்ல வாய்யா (ஏந் தூக்கத்துல

சேங்குருவி காணலியே சேத்துவயல் காணலியே
ஓங்கி நின்ன மலையகூட ஒடச்சிபுட்டார் காணலியே
மாங்குயிலு காணலியே மஞ்சம்புல்லும் காணலியே
தேங்காத் தண்ணி குளத்தைக் கூட தூத்துப்புட்டார் காணலியே
வாழ நாதியில்லா ஊரவிட்டுப் போறேன் கூட்டத்தோட கூட்டமா - இந்த
பாழும் மனசுல ஆணி அறையாத கூப்பிடு சீக்கிரமா (ஏந் தூக்கத்துல