Saturday, May 7, 2011

சீருடைகளும் பீச்சாங்கைகளும்

அரசுப் பணியாளர்களின் கண்பட்டு
அழியத் தொடங்கின
வயல்வெளிகளும் மாந்தோப்புகளும்
புதுக்குடியிருப்புகளால் உருமாறத் தொடங்கியது
நகரின் கிரணம் படத்தொடங்கிய கிராமம்

குடிசைகள் சில ஓடுவேய்ந்துகொள்ள
அங்கொன்றும் இங்கொன்றுமாய்
முளைக்கத் தொடங்கின
மெத்தை வீடுகள்

காலையில் ஒதுங்க பாதித்தெரு
வழக்கம் போல
டிரான்ஸ்போர்ட் மைதானத்திற்குச் செல்ல
வீட்டிலேயே கொல்லையில்
கட்டிக்கொண்டது பாதித்தெரு

வீட்டில் வந்து அள்ளிச்செல்ல
நகராட்சி இறக்குமதி செய்தது
சீருடை மனிதர்களை

எங்கள் தெருவுக்கு தேவதாஸ்
காக்கிக் கால்சட்டையில் வருவார்
ஆறடி உயர கம்பீரமாய்
கையில் வாளியுடன்

எங்கள் காலைக்கடன் முடிவில்
அவருடைய கடமை தொடங்கும்
வாரியில் எடுத்து
வாளியை நிறைத்துச் செல்வார்

ராஜா மாதிரி அவர் வர
தெருக்காரர்கள் ஒதுங்கிச் செல்வார்கள்
தங்கள் வயிற்றின்
சற்று முந்தைய இருப்பைக்
காணச் சகிக்காமல்
அருவெறுத்துத் திரும்பும் முகங்களோடு

ஒருநாள் வரவில்லை என்றால்
தெருவே நாறும் எனத் தெரிந்திருந்தும்
வரத்தவறுவதில்லை அவர்
உடம்பு சரியில்லை
கல்யாணம் காட்சி என்றால்
அவருக்குப் பதில் இன்னொருவர்
காக்கிக் கால்சட்டையில்
கையில் வாளியோடு

தேவதாஸுக்குத் திருமணம் ஆயிற்று
இப்போது சரோஜாவும்
நீலச்சேலை சீருடையில்
கையில் வாளியோடு

கோயில் தொழில்போலவே
வாளி ஏந்தும் தொழிலும்
வாழ்க்கைப் பட்டுவிட்டது
சாதிக்கு

புளியமரத்தடியில் ஐஸ்பாய் ஆட்டம்
கண்பொத்தி எண்ணி
கண்டுபிடிக்க ஓடும்போது
சரோஜா மீது
இடித்துவிட்டான் அவன்

ஐஸ்பாய் முடித்து தீட்டாட்டம் தொடங்கியது
தொடாதீங்க யாரும்
தொட்டாத் தீட்டு
கேலி செய்யத் தொடங்கினாள்
கங்கா அக்கா கிருஷ்ணாபாய்
கூடச் சேர்ந்துகொண்டது கூட்டம்

அழத்தொடங்கும் வேளையில்
ஆறுதலாய்ச் சொன்னாள் ஒருவார்த்தை
போய் அம்மாக்கிட்ட சொல்லி
மஞ்சதண்ணி தெளிச்சிக்கோ

அம்மாவிடம் மஞ்சத் தண்ணி கேட்டான்
அம்மா மஞ்சள் தூளைக்
கரைக்கத் தொடங்கினாள்

மஞ்சள் கிழங்குகளை
அரைத்துத் திரட்டினாற்போல்
அள்ளிக்கொண்டு போனாள் சரோஜா
வாளியை நிறைய
யாரையும் சட்டைசெய்யாமல்

அப்புறம்
கூரைகள் மாடிகளாயின
வீட்டுக்குள்ளேயே அதுவும்

தேவதாஸும் சரோஜாவும்
எங்கோ போய்விட்டார்கள்
வாளியோடு
தீட்டைச் சுமந்துகொண்டு

நிசப்தம்

நிசப்தத்தின் நடுவீட்டில்
என்னைக் கிடத்தியிருந்தேன்
அகம் கால்முளைத்து
வெளியே கிளைவிரித்தது
இலைகள் பிடிப்பற்றுச்
சருகுகளாய் உதிர்ந்தன
சருகுகள் சப்திக்க
நடக்கிறது காலம்
என் பற்றிய பிரக்ஞையற்று
ஆழ்குழாய்க் கிணற்றுக்குள்
தவறி விழுந்தவனோடு
உறவைத் துண்டித்துக்கொள்ளும்
பாதையைப் போல
முன்னும் பின்னும் தேடினேன்
வெளியே சென்ற நிசப்தம்
இன்னும் வீடுதிரும்பவில்லை
காத்திருக்கச் சொன்னது தனிமை
காலத்தின் ஒற்றைச் சுவடுகளை
சருகுகள் மொழிபெயர்த்துக்கொண்டிருந்தன
தனிமையின் சங்கிலிக்கண்ணியை
அறுத்துக்கொண்டு
காலத்தின் கைப்பற்ற விரைந்தேன்
அநேகமாக இப்போது
நிசப்தம் வீடுதிரும்பியிருக்கலாம்

கோடு சாமங்களின் கவிதை

கோடு சாமங்களின் கவிதை

உலகத்து இருளையெல்லாம்
ஒன்றாயிழைத்து
வரையப்பட்டது அந்தக்கோடு

பாதங்களுக்கு முன்னே
நீண்டு விரிந்திருந்தது
இருத்தலையும் கடத்தலையும்
இருகூறாய்ப் பிரித்த கோடு
அறத்தின் கூர்நகங்களாய்
காற்றில் அலைபாயும் முட்களோடு

இரவு அடைகாக்கிறது
வாழ்தலின் இரகசியத்தை
கோடு அடைகாக்கிறது
இரகசியத்தின் வாழ்வை

கோடு சாமங்களின் கவிதை
இரகசியத்தின் புதைமேடு

பாம்புகள் இரைதேடும்
வனாந்தரத்து இருளூடே
மினுக்கட்டான் பூச்சிகளாய்
புதைந்தொளிர்கின்றன
கங்குகள்

சாம்பலிலிருந்து கிளர்ந்தெழுந்தது
தனிமையை ஊடறுத்து
இரவின் பாடல்

பற்றி எரிந்தது கோடு
அந்தகாரத்தின் இடுக்கில்
கசியும் கருந்திரவத்தை
முகர்ந்தவாறே

நெருப்பு விழுங்கிய பாம்பாய்
நெளிந்து நெளிந்து
வெந்து தணிந்தது கோடு
இருளோடு

சாம்பல் பூசிய விடியல்
பறைசாற்றியது
இரவு தீக்குளித்த கதையை

Sunday, May 1, 2011

கை நழுவிய விஷூக் கனி

கை நழுவிய விஷூக் கனி

அந்தக் குயில் பாடினால்
பரவசத்தில்
உலகமே நனைந்து கிடக்கும்

குயிலும் நனைந்திருக்கும்
கண்ணீரில்
தான் பாடும் தாலாட்டை
அர்த்தப்படுத்த
ஒரு மழலை வேண்டி,,,

ஐயிரு திங்கள் அனுபவத்திற்காய்
பதினைந்து ஆண்டுகள்
நெருப்பைச் சுமந்த கருப்பை
முதன்முதலாய் உயிரைச் சுமந்தது

கடல் குடித்த பெருவயிற்றுமேகம்
நீரறியா நெடும்பாலையில்
மொத்தமாய்க் கொட்டித் தீர்த்த பரவசம்
வந்தனா பிறந்தபோது,,,

வண்ணங்கள் பூத்த
வசந்தகாலம் அது
வாழ்தலின் உயிர்ப்பை
அர்த்தப்படுத்திக் கொண்டிருந்தன
பசுமையைத் தளிர்களிலும்
நிறங்களை மலர்களிலும்
எழுதிச் சென்ற நாட்கள்,,,

கடல்கடந்த பயணம் ஒன்றின்போது
கூடவே கடந்துபோனது வசந்தகாலமும்,,,
சருகுகள் சப்திக்க பயணம் தொடங்கியது
இலையுதிர்காலம்

பழுத்த இலைகளைப் பறிக்கும்வேளை
அவசரத்தில் அறியாமல்
பிஞ்சுப்பூவை ஏனோ
பறித்துவிட்டது

சதா கனவில் பூக்கும் பூ
கையில் கிடைத்தது போலத்தான்
வந்தனா வந்ததும் போனதும்
கனவாகவே

கருப்பையின் கேள்விக்குக்
காத்திருந்து கிடைத்த விடை
தொலைந்துவிட்டது

அறிவியலின் அதிசயத்தை
அர்த்தமற்றதாக்கிவிட்டது
அந்தக் கணம்

பனிக்குடத்தில் மிதந்த முத்து
நீச்சல் குளத்தில் தொலைந்துபோனது

உயிர்ப்பூவே
நீ மலர்ந்த பொழுதில்
மலடி என்ற வார்த்தை
மரித்து உதிர்ந்தது சருகாய்,,,
மகிழ்ச்சியில் திளைக்கவிடாது
மலரே நீயும் உதிர்ந்ததேன்?

தேன் துளிர்க்கும் மழலை
தண்ணீரில் கரைந்ததாய்
கண்ணீரில் கரைகின்றன பொழுதுகள்,,,

கானமழைக்குயில் கரைகிறது
கண்ணீர்மழையில் நனைகிறது உலகம்
தாய்மையின் பரிதவிப்புக்கு
ஆறுதல் என்ன கூறமுடியும்?

தாயே! கண்ணீரைத் துடைத்துக்கொள்
பாட்டை மட்டும் நிறுத்திவிடாதே
அது பூமிக்குழந்தையின்
உயிர் வளர்க்கும் தாய்ப்பால்

அமுதம் கசியும்
உன் தாலாட்டிற்காக
ஏங்கித் தவிக்கின்றனர்
வந்தனாக்கள்,,,

ஒரு வந்தனாவை நெஞ்சில் நிறுத்து
அடிவயிற்றில் சுழன்றெரியும்
நெருப்புச்சுவையின் நீலநாக்கில்
உன் சோகம் கரைத்துப்
பாடத் தொடங்கு
அவர்களுக்காக,,,

குழலும் யாழும் இழையும் குரலெடுத்து
உயிரில் குழைத்துப் பாடு
திசையெங்கும் பூக்கட்டும்
வந்தனாவின் வாசம் சுமந்த பூக்கள்,,,

மடிசுமந்தது மரித்துப்போனதால்
மரித்துப்போய்விடாது தாய்மையும்
நினைவுகள் கருசுமக்க உன்னோடு
என்றும் வாழ்வாள் வந்தனா

வந்தனாவின் அம்மாவுக்கு,,,