Monday, June 24, 2013

மரணமிலாக் கவிஞனுக்குப் பிறந்தநாள் சிறுகூடல் பட்டியின் பிள்ளைச் சிணுங்கல் கவிதையாய் ஊற்றெடுத்தது தமிழன்னையின் கால்நனைத்தது பாசம் பொங்க அள்ளியெடுத்தாள் அவன் கவிஞன் ஆனான் அரியாசனம கொடுத்தாள் கவியரசாய் முடிசூடினான் எழுதுகோல் செங்கோல் ஆனது கண்ணதாசனாய்ப் பெயர் சூடினான் திசை யாவும் அடிமையானது ஈன்ற பொழுதினும் பெரிதாய் உவந்தாள் தாயை வளர்த்தான் தானும் வளர்ந்தான் தனையாள யாருமின்றித தனியாட்சி செய்தான் அது தாசர்களின் காலம் பாரதிதாசன் சுப்புரத்தின தாசன் வாணிதாசன் கம்பதாசன் அந்த வரிசையில் கண்ணதாசனும் முன்சொன்னோர் போல இவன் பொய்யடிமை யல்ல்ன் மதுவுக்கும் சுகத்திற்கும் மெய்யான தாசன் அடிமைத் தளைகளைச் சிறகாய் விரித்தான் மயங்கவைக்கும் போதைகளில் மூழ்காமல் மிதந்தான் கவிதைவானில் பறந்தான் உயர்ந்தான் மதுக்கிண்ணத்தில் வழுக்கி விழுந்தான் காமக்குளத்தில் மூழ்கித் திளைத்தான் உணர்வுகள் விழித்தெழும் வேளைகளில் ஞானக் கரையில பாவம் கரைத்தான் வாழ்வதற்கு வழிகாட்டும் அவன்கவிதை கூடாத வாழ்க்கைக்குச் சான்றாகும் சுயசரிதை சேர்த்துவைக்க அவன் கற்கவில்லை வாட்டிவதைத்த நெருக்கடிகள் கொஞ்சமில்லை இன்பத்தில் நீராடினான் துன்பத்தில் போராடினான் மேகம் போலக் கவிதை பொழிந்து நிர்மலமாகும் அவன்வானம் தாகம் பெருகப் பருகித் திளைத்து மேலும் கேட்கும் சோலைவனம் திரையுலகில் ஒருகால் எழுத்துலகில் மற்றொருகால் தொடுவானம் முழுதும் அடியளந்தது புகழென்னும் மூன்றாம்கால் இருக்க இடம் தேடியவனுக்கு உலகமே இருக்கையானது சிறுகூடல் பிறப்பு சிறகடித்துப் பறந்து சிகாகோவில் மறைந்தது உலகக் கவிஞனென உறுதிப்படுத்தியது மரணம் உடல் அழிந்த பின்னும் நிலைக்கின்ற நிழலாய் எங்கும் உயிர்சுமந்தலையும் அவன் பாடல்கள் ஒவ்வொரு அடியும் உயிரின் அணுவாய் உணர்ச்சிகள் பொங்கும் உருத்தரும் சதையாய் அனுபவங்கள் வாழ்நாளின் அரவணைப்பாய் உயிர்க்கின்றான் நம்மிடையே நிரந்தரமாய் பொய்யில்லை கவிஞனுக்கு மரணமில்லை - வேல, நெடுஞ்செழியன்

1 comment:

  1. 'போதையில் மூழ்காமல் மிதந்தான்'... வரிகளில் தான் எத்தனை நுட்பம்.. போதை உணர குடிப்பவர்களுக்கும்.,

    உணர்வே இல்லாமல் போக குடிப்பவர்களுக்கும் தான் எத்துணை வேறுபாடு. தாங்கள் சொல்வதைப் போல கவியரசு மூழ்காமல் மிதந்திருக்கலாம்... ஆனால் அவன் 'கவி' போதையில் அனைவருமே மூழ்கி உள்ளோம்.

    ReplyDelete