கடத்தலும் கடவாமையும்
வேல. நெடுஞ்செழியன்
அவன் மலங்க மலங்க
விழித்துக்கொண்டிருந்தான்
சுற்றிலும் நாலைந்துபேர்
துக்கம் விசாரித்துக்கொண்டிருந்தனர்
ஆழாக்கா
இருந்துக்கிட்டு ப்ளஸ்டூ படிக்கிறேங்கிறான்
நெசமாலுமே
கடத்திக்கிட்டு வந்திருப்பாங்களா இல்ல
வீட்டுல கோவிச்சிட்டு
வந்துட்டு பொய்சொல்றானோ
சந்தேக்க் குரல்கள்
சலசலத்தன
மாமன் தேனீர் குடிக்க
கைகளில்
பிஸ்கெட்டுகளோடு
அவன் மலங்க மலங்க
விழித்துக்கொண்டிருந்தான்
அப்போதுதான் அழுதுமுடித்திருந்தான்
எனபதை
மழைமுடிந்த பொழுதில்
இலையின் நுனியில்
ஒட்டியிருக்கும்
இறுதித்துளிகள் போல
கண்ணின்கீழே
ஈரம் தேங்கி
அறிவித்த்து
இடைவேளை நேரத்துல
ஒண்ணுக்குப் போக வெளியவந்தவனை
பள்ளிக்கூட
கொளத்தாண்டையே...
ஏதே அடரசு
கேட்டானுங்களாம்
தெரியலேன்னு
சொல்லும்போதே
வாயில துணியை வச்சி
அழுத்துனாங்களாம்
திமிற திமிற வண்டில
தூக்கி உக்காரவச்சானுங்களாம்
அப்புறம் என்ன
நடந்த்துன்னு தெரியலையாம்
நேத்து காலைல நடந்தது
இப்பத்தான் நெனவு
வந்து பார்த்தா
மணலூருபேட்டை
பேருந்து நிறுத்த்த்தாணட
எடமும் புரியாம
எழவும் புரியாம
ஏதோ நடந்து அரசு கல்லூரிகிட்ட
வந்துருக்கான்
விண்ணப்பம் போடவந்த
மாமன்காரன்
என்னடா நம்ம பய
இங்கேன்னு பார்த்து
ஏதுடா தம்பி இவ்ளோ
தூரம்ன்னான்
பயபுள்ள ஓன்னு அழவும்
ஒண்ணுமே புரியல மாமனுக்கு
அப்புறமா
ஆசுவாசப்படுத்தி
விசாரிச்சப்பத்தான்
நடந்த்து தெரிந்தது
நீலா கடையில
உக்காரவச்சி
தேனீரும் பன்னும்
வாங்கித் தந்தான்
நேத்தி காணாத பையன
வீட்டுல தேடலையா?
மாரியம்மன்
திருவிழாவில நண்பர்களோட சுத்த போயிருப்பான்னு
நேத்து கண்டுக்கிடாத
வீட்டு ஆளுங்க
இன்னிக்கும்
காணோமின்னு இப்பதான்
காவல் நிலையத்த
நோக்கிப் போக இருந்தாங்களாம்
மாமன் செல்வழியே பேசி
தகவல் கொடுத்தான்
காலைல சாப்பிட்டியா? பக்கத்திலிருந்தவங்களோட பிற்பகல் கேள்வி
நேத்தி காலைல
சாப்டதுதான் தெரியும்னான்
நான் கேட்டேன்
அவனிடம்
ஊரு பேரு? எடத்தனூரு
அப்பா பேரு? அண்ணாமலை
உன் பேரு?
அருண்குமாரு
எதுக்குடா உன்னபோயி
தூக்கணும்?
அவன் அப்பா
வெளிநாட்டுல இருக்காராம்
ஒருவேளை ஆளமாத்தி
தூக்கிட்டு
அப்புறமா விட்டுட்டு போயிருக்கலாம்
மாமன மட்டும்
பாக்காட்டி பையன்
என்ன பண்ணியிருப்பான்
ஆளாளுக்குப்
பேசினார்கள்
ஒரு பச்சபுள்ள
மலங்கமலங்க நிக்கறதப் பார்த்து
அப்படியே
விட்டுடமாட்டோம்னு காட்றதுக்காக
என் பங்குக்கு நானும்
சொன்னேன்
எங்க கல்லூரில கூட
ஒரு
எடத்தனூரு வாத்தியாரு
இருக்காருன்னேன்
நான் உச்சரித்த பெயர்
அவனுக்குப் புரியவில்லை
அவன் மலங்க மலங்க விழித்தவாறே
சொன்னான்
நீங்க சொல்றவரு
ஒருவேளை
ஊருக்குள்ள
இருக்கலாம்
நான் காலனி
No comments:
Post a Comment