Saturday, November 16, 2013

முட்களின் தேசம்

அது ஒரு பூந்தோட்டம்!
அந்தத் தோட்டத்தை அவர்கள்தான்
அமைத்தார்கள்
இல்லறம் என்ற பெயரில்!

மகிழ்ச்சியை மகரந்தங்களாய் தூவி
மணம் பரப்பும் ரோஜாத் தோட்டம்!
மலர்களின் சிரிப்பில்
இலைகளின் செழிப்பில்
முட்கள் தெரியவில்லை!

அவ்வப்போது முட்கள் தம்
இருப்பைக் காட்டினாலும்
பொருட்படுத்தப்படவில்லை
மழலைகளின் தளிர்க்கைகள்
வலியைத் தடவிச் சரிசெய்தன!

இலைகள் உதிரத்தொடங்கிய
பொழுதொன்றில்
முட்கள் கண்களை உறுத்த
மலர்கள் எரிச்சலூட்டின!

அவர்கள் மலர்களைச் சிதைத்து
இதழிதழாய் உதிர்த்து
கைகளில் குருதி வழிய
முட்களைப் பறித்துச் சூடினர்
தலையில் சூடிய முள்
மனதுக்குள் பூதாகரமாய் வளர்ந்தடர
அழகிழந்தது தோட்டம்
முள்காடு என்ற பெயரில்!

உதிர்ந்த இதழ்களை
மலர்ப்படுக்கையாக எண்ணி
மகிழ்கின்றன மழலைகள்
வாடிய இதழ்களுக்கு
நிறமூட்டுவதாய்
ஒழுகும் குருதியில் அகமகிழ்நதன
முள்காட்டின் உணர்வின்றி!

முள்ளைச்சூடி முள்ளில் கீறி
முள்ளாகவே மாறும் பொழுதின் அண்மையில்
அவர்கள் மலர்த்தோட்டம் நினைவுவர
அலைந்து தேடினர்
தொலைத்தமைக்கான காரணங்களை
ஒருவர்மீ தொருவர் சுமத்தினர்
பழிகளைச் செதுக்கிச் சிலுவைகளாக்கிச்
சுமந்தலைந்தனர்
கண்ணை மறைத்தெழந்த முள்ளை
பறித்தெறியத் தெரியாமல்!

அந்த மலர்த்தோட்டத்தைச் சுமந்து
வளரிளங் கன்றுகள்
கனம் தாங்காமல்
கலங்குகின்றன!
மலர்கள் விரிந்த பரப்பெங்கும்
ஆட்சியைப் பரப்பியது முள்

தோட்டம் என்பது
முட்களின் தேசம் என்று
வாலிபக்கன்றுகளுக்கு உணர்த்தப்பட்டதில்
அவற்றின் பாதை
முட்களையே பூப்பிக்கக் கூடும்

வேர்கள் பறிக்கமுடியாத ஆழத்தில்
பின்னிப் பிணைந்திருக்க
முட்களின் வனாந்திரச் சிறையில்
பூக்களின் கனவுகளை உதிர்த்து
சபித்துக்கொண்டலைகின்றனர்
தமது தோட்டம் கன்றுகளுக்கும்
உரியது என்பதை மறந்து

Sunday, November 10, 2013

நுரைபொங்கப் பெருகியோடும்
வெள்ளச் சுழிப்பில் சிக்கி
சுழன்று அலைகின்றன வார்த்தைகள்
தப்பி மிதக்கின்ற இலைப்பரப்பில்
உயிர்பிழைத்து ஊர்கின்றது
கவிதை
கரைதேடி!