பாட்டி சொல்லாத கதை
என் ஆர்ட்டிக் வெளியிலும்
எங்கோ அடிமூலையில்
சுவர்க்கோழி இரைச்சலாய்
உன் கொக்கரிப்பு
இருளில் தொலைந்த நிழலாய்
ஈரவிழிகளோடு என் இருப்பு
அதில் நீ உப்புச் சுவைத்தாய்
மூச்சு முட்டும் உன்
ஆல்கஹால் அரவணைப்பில்
கருகிக்கிடந்த பொழுதுகளைக்
கிளறிப் பார்க்கிறது மனம்
கிழித்தெறிந்த தேதிக் கழிவுகளில்
எலிசெத்த நாற்றமாய் உன்பதிவு
சுயம் உணர்ந்த பொழுதொன்றில்
கட்டுடைத்து வெளியேறினேன்
உன் கட்டுக்கதைகளில்
காற்றில் பறந்தது பத்தினிப்பட்டம்
ஆக்சிஜன் வெளியில் சிறகசைத்தேன்
பணியிடமாற்றம் என்று பரிகசித்தாய்
கூடுதிரும்பச் சொன்னது தாய்மரம்
கூண்டு தயாரிப்பவர்களின் நேச வலைப்பின்னல்
கடந்து நடந்தேன் கவனமாய்
கால்களை விலங்கிட்டது காலச்சிறை
சுதந்திரம் என்பது தனிமைப்படல்
பாட்டி சொல்லாத கதை
உன் மாற்றமில்லாக் கூட்டில்
சிறகறியா மற்றொரு பறவை
கால்மேல் கால்போட்டு வீற்றிருக்கிறது
உன் அதிகாரம் காலங்காலமாய்
பாதையெங்கும் துளைக்கும்
பார்வைகளை களையெடுகின்றது
என் மையூறும் ஆறாம்விரல்
நெஞ்சாங்குழியில் நெருடுகிறது
உன் கொக்கரிப்பும் என் அவமதிப்பும்
உணர்த்தவேண்டும் பறவைகளுக்கெலாம்
சுயத்தையும் சிறகையும்